மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
தற்போது, இவ்வழக்கின் விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் மும்பை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை, ட்ரைடென்ட் ஹோட்டலில் சச்சின் வாஸ் தங்கியிருந்த அறையில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தினர். அவர் போலியான ஆதார் அட்டை மூலம் ரூம் புக் செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காதலுக்கு எதிராய் நின்ற சாதி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி