இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். இதில், இந்தியாவில் நிலவி வரும் கரோனா சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.
“இந்திய-ரஷ்ய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு கணிசமான உதவிகளை வழங்குவதற்காக ரஷ்யா, அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது”என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக அறிவித்தது.
அதன்படி இந்தியாவுக்கு 22 டன் மருத்துவ உபகரணங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. அதில் 20 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 75 வெண்டிலேட்டர்கள், 150 மருத்துவ கண்காணிப்பு கருவிகள்,உள்ளிட்டவை அடங்கும்.