பெங்களூரு: கர்நாடகாவில் மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகத்தின் இயக்குநராக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்தவர் ரோகினி சிந்தூரி. அண்மையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தைப் போர் அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ரோகினி சிந்தூரி குறித்து ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும், சிந்தூரி தனது தனிப்பட்ட புகைப்படங்களை சக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும் டிவிட்டரில் பதிவிட்ட ரூபா, "ஜலாஹல்லி பகுதியில் ஐஏஎஸ் அதிகாரியான சிந்தூரி பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு கட்டியுள்ளார். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவில்லை. இத்தாலியில் இருந்து ரூ.2 கோடி வரை ஃபர்னிச்சர் பொருட்களை வாங்கியுள்ளார். அதிகாரத்தை பயன்படுத்தி அவர் இன்னும் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
எனினும் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்த சிந்தூரி, ரூபா மனநிலை பாதிக்கப்பட்டவர் என விமர்சித்தார். பெண் அதிகாரிகள் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி மாநில அரசு எச்சரித்தது. இந்நிலையில் இரு அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து கர்நாடகா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா மாநில தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை பிறப்பித்துள்ள உத்தரவில், "இந்து சமய அறநிலையத்துறையின் புதிய ஆணையராக பசவராஜேந்திரா நியமிக்கப்படுகிறார். மாநில கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக பாரதி நியமிக்கப்படுகிறார். நில அளவைத்துறை ஆணையராக இருந்த ரூபாவின் கணவர் முனீஷ் மொட்கில், தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் முதன்மை செயலாளராக பணியிடம் மாற்றப்படுகிறார்". என கூறப்பட்டுள்ளது.
எனினும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு பெண் அதிகாரிகளுக்கும் உடனடியாக புதிய பணிகள் ஒதுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி, இந்து வளர்ச்சி விகிதமாக இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி