மே 31ஆம் தேதி, தெலுங்கு மொழியைச் சேர்ந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தன. மாநில அரசின் செயல்பாடு குறித்து விமர்சனப் பார்வையில் சில கருத்துகளைப் பதிந்ததாகக்கூறி, இந்த இரண்டு செய்தி நிறுவனங்கள் மீது ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும்விதமாக, இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாநில அரசோ, தேச துரோகம் வழக்கிற்கான தெளிவான முகாந்திரம் இருப்பதாகக் கூறியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேச துரோகம் என்பது என்ன என்பதை வரையறை செய்வதற்கான காலம் வந்துவிட்டதாகக் கருத்து கூறியது.
தேச துரோகம் என்றால் என்ன? கடந்த 1962ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கேதர் நாத் சிங் Vs பிகார் மாநில அரசு வழக்கில், இதற்குரிய வரையறை தந்துள்ளது.
1995ஆம் ஆண்டு பல்வந்த் சிங், பஞ்சாப் மாநில அரசு வழக்கிலும், இன்றைய வினோத் துவா இமாசல் பிரதேச மாநில அரசு வழக்கிலும், இந்த வரையறை முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தேச துரோகச் சட்டம் எத்தனை முறை விளக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது?
உச்ச நீதிமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என, இந்திய அரசியல் சாசனத்தின் 141ஆவது சட்டப்பிரிவில் தெளியாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்த பின்னர், அது ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், சிவில் அலுவலர்கள், காவல் துறை, நீதிமன்றம் என, அனைத்து அமைப்பிற்கும் பொருந்தும்.
ஒவ்வொரு வழக்கிற்கும் புதிய விளக்கம் என்பது தேவையில்லை. அது நடைமுறையில் தேவையற்ற இழுவையை உருவாக்கிவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே இதில் பிரச்சினையை உருவாக்குகிறது.
கேதர் நாத் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, "ஒரு குடிமகனுக்கு அரசு பற்றி அவருக்குத் தோன்றும் எண்ணங்களை கருத்தாகவோ, விமர்சனமாகவோ சொல்வதற்கும், எழுதுவதற்கும் உரிமை உள்ளது; அந்தக் கருத்து மக்களை அரசுக்கு எதிராக வன்முறையின் பாதையில் தூண்டிவிடாமலும், பொது அமைதிக்குச் சீர்குலைவு ஏற்படுத்தும் நோக்கம் இல்லாமலும், இருக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் பேசிய, எழுதிய சொற்கள் தீங்கு விளைவிக்கும் நோக்குடனோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடனோ, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடனோ இருக்கும்பட்சத்தில், அதைத் தடுக்கலாம் எனத் தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேச துரோகச் சட்டம் என்பது இதுபோன்ற தவறான நோக்குடன் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை எற்படுத்தும் விவகாரங்களுக்கே பொருந்தும் எனத் தெளிவாகவும், நேரடியாகவும் உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இந்தச் சட்டத்தை ஊடகவியலாளர், செய்தி நிறுவனத்துக்கு, உதாரணத்திற்காகப் பொருத்திப் பார்ப்போம். அரசின் ஒரு குறிப்பிட்ட முடிவு அல்லது கொள்கையை மறுத்தோ அல்லது விமர்சித்தோ ஒரு செய்தி வெளியிடப்படுகிறது.
தேச துரோகம் என்ற வரையறைக்கு இது பொருந்தும். இருப்பினும் இந்தச் செய்திக்கு எதிராகக் காவல் துறையில் தேச துரோகக் குற்றச்சாட்டில் புகாரளிக்கப்படுகிறது.
காவல் அலுவலருக்கு தேச துரோகச் சட்டப்பிரிவு என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதுதானே அடிப்படை. இது மாற்று கருத்துதானே தவிர தேச துரோகம் அல்ல என்பதை அவர் வழக்குத் தொடர்ந்தவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், காவல் அலுவலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, குற்றச்சாட்டை ஏற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறார். இந்தச் சூழலில் காவல் அலுவலரின் தவறான நடவடிக்கையைத் தடுக்கும் பொறுப்பு யாருடையது?
1962ஆம் ஆண்டு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே தற்போதுவரை பின்பற்றாமல் காவல் துறையினர் நடந்துவரும்போது, தற்போது 2021ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பை பின்பற்றுவார்கள் என என்ன நிச்சயம், சந்தேகமே.
எனவே, குற்றச்சாட்டை ஏற்று காவல் துறை தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதே யதார்த்தம். இதுபோன்ற சூழலில் காவல் துறை மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், குற்றம்புரியாத நபரிடம், அவரது சுதந்திரம், அடிப்படை கருத்துரிமை பறிக்கும்விதமாக நடந்துகொண்ட காவலர், தனது தவறிலிருந்து தொடர்ந்து தப்பித்துக்கொண்டேதான் போவார்.
சிந்திக்காமல் காவல் அலுவலர் மேற்கொண்ட நடவடிக்கையால் ஏற்படும் மோசமான விளைவு இது. எனவே, காவல் துறையை தனது நடவடிக்கைக்குப் பொறுப்பேற்க வைப்பதே இதற்கு ஒரே தீர்வாகும்.
இதை உறுதிசெய்யாதபட்சத்தில், உச்ச நீதிமன்றம் எத்தனை தீர்ப்பு வழங்கினாலும், அதற்குப் பலனற்ற வகையில், இந்தத் தேச துரோகச் சட்டம் தொடர்ந்து தவறாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும்.
நீதித் துறையின் செயல்பாடு என்ன? குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தின் முன் முன்னிறுத்தப்படும்போது, நீதிபதி முறையாகச் சிந்தித்து, வழக்கின் முகாந்திரங்களை ஆய்ந்து ரிமாண்ட் (காவலில் வை, சிறைப்படுத்து) உத்தரவையிட மறுக்க வேண்டும்.
ஆனால், கவலையளிக்கும் விதமாகப் பெரும்பாலான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் காவல் துறையாலோ அல்லது நீதிமன்றத்தாலோ காவலில் வைக்கப்படுவதே வழக்கமாக உள்ளது.
நீதித் துறை என்பது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமையை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரணாகச் செயல்பட வேண்டியது அதன் கடமை. இதுபோன்ற சூழலில் நீதிபதி முறையாகச் சிந்தித்து உத்தரவிடும்பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு உடனடியாக விடுதலை கிடைக்கும்.
சில தருணங்களில் தேவைப்பட்டால், உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டையோ, முதல் தகவல் அறிக்கையையோ (எஃப்.ஐ.ஆர்.) ஒதுக்கிவைக்கலாம்; வினோத் துவா வழக்கில் நடந்ததுபோல.
ஆனால், பெரும்பாலான நிகழ்வுகளில் பல மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கேலிச்சித்திர கலைஞர்கள், அரசியல்வாதிகள், மாற்று கருத்தாளர்கள் பல மாதங்களில் சிறையிலடைக்கப்படும் கவலைக்குரிய சம்பவம் தொடர்ந்து அரங்கேறிவருகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கருத்தில்கொள்ளாமல், நீதிபதிகள் தங்கள் முன்வரும் வழக்குகளைக் கையாண்டால், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அர்த்தமற்றதாக மாற்றிவிடும்.
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் தேச துரோக வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்துவருகின்றன. எண்ணிக்கை மிகப்பெரியதாக இல்லாததுபோல் தோன்றலாம்; ஆனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் அடிப்படை பேச்சு உரிமையை, கருத்து உரிமையை இழந்து சிறையில் வாடும் அவலநிலை உருவாகியுள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஆண்டுக்கணக்கு ஆகும்பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. சட்டத்தின் அடிப்படை புரிதல் கிடைத்து முதல் தகவல் அறிக்கை ரத்துசெய்யப்படும் வரையில், அவர்கள் பல மாதம் சிறைவாசம் அனுபவிக்கும் சூழல் ஏற்படுகிறது.
காவல் துறை, அரசு, நீதித் துறையின் பொறுப்புத்தன்மையை உறுதிசெய்வது இன்றைய காலத்தின் தேவையாகும். அவர்கள் தங்களுக்கு இழப்பு இல்லை என்ற நோக்கில், பேரதிகாரப் பார்வையில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
அவர்களின் பொறுப்புத்தன்மை உறுதிசெய்யப்பட்டிருந்தால் இன்றைய சூழல் எழுந்திருக்காது. இதனால் இழப்பிற்குள்ளாவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளே.
நீதிபதி மதன் பி லோகூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாவார். ஆந்திரப் பிரதேசம், கவுஹாத்தி ஆகிய உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.