டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்த 19 வயது இளம்பெண் அங்கிதா சந்தேகத்திற்குரிய முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், விடுதியின் உரிமையாளரும், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனுமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டார். விடுதியில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். புல்கித் ஆர்யா அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்பட்டது. கடந்த 24ஆம் தேதி அங்கிதாவின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் காவல்துறையினர் ஆரம்பம் முதலே அலட்சியமாக செயல்பட்டு வந்ததாக அங்கிதாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், யம்கேஷ்வர் காவல் துணை ஆய்வாளர் பட்வாரி வைபவ் பிரதாப் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி அங்கிதா காணாமல் போனது குறித்து அவரது தந்தை, காவல்துறை அதிகாரி பட்வாரி வைபவ் பிரதாபிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததாகவும், அதை பொருட்படுத்தாலமல் அவர் 4 நாட்கள் விடுப்பில் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
விடுப்பில் சென்றதோடு மட்டுமல்லாமல் செல்போனையும் அணைத்து வைத்ததால், சக காவலர்கள் யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் மற்றொரு திருப்பமாக, பட்வாரி வைபவ் பிரதாப்புக்கும், புல்கித் ஆர்யாவுக்கும் நட்பு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே அங்கிதாவின் தந்தை தகவலை கூறியபோது அலட்சியமாக செயல்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. அதனால், அங்கிதா கொலை வழக்கில் பட்வாரி வைபவ் பிரதாபுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் பவுரி, "சம்மந்தப்பட்ட விடுதி எரிக்கப்பட்டபோதும் தடயங்கள் எதுவும் அழியவில்லை, அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.