டெல்லி: சமையல் எண்ணெய்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை இது நடைமுறையில் இருக்கும்.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், "இருப்பு, பயன்பாட்டை அடிப்படையாக வைத்து, எவ்வளவு இருப்பு வைப்பது என்பதை மாநில அரசே முடிவுசெய்யலாம்.
இருந்தாலும், சில வகையான ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு இந்த உச்சவரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எந்த வியாபாரியாவது, உச்சவரம்புக்கு மேல் இருப்பு வைத்திருந்தால், அதிகமாக உள்ள சமையல் எண்ணெய் விவரத்தை ஒன்றிய உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிப்பதுடன், உரிய காலத்துக்குள் உச்சவரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.
மேலும், கடுகு எண்ணெய் மீதான யூக வணிகம், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளால், உள்நாட்டுச் சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும், மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்" எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க : முதலமைச்சரை கொல்ல திட்டம்: இளைஞரைக் காப்பாற்றிய காவலர்கள்