டெல்லி: ஐஐடி ரூர்க்கி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து, கர்ப்பிணி பெண்களின் பராமரிப்புக்காக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளன. 'ஸ்வஸ்த்கர்ப்' என்ற இந்த செயலியை பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர்.
மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புற பெண்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த செயலி மூலம் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என்றும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுக பரிந்துரை செய்யும் என்றும் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து விவரங்களையும் இது பதிவு செய்து வைத்துக் கொள்ளும் என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவதையும் கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மெஷின் லேர்னிங் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை கண்டறியும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
கரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில், மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதை 150 கர்ப்பிணிகளிடம் வழங்கி பரிசோதித்ததில் அதன் செயல்திறன் சிறப்பாக உள்ளதென நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.