நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஆக்சிஜன் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தீவிரம் காட்டிவருகின்றன. இச்சூழலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆபத்பாந்தவனாக ரிலையன்ஸ்
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மருத்துவம் பெற்றுவரும் தொற்றாளர்களுக்கு சுவாசம் கொடுக்க ரிலையன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
அம்மாநிலத்தின் இந்தூர் நகருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் தனது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஆக்சிஜனை அனுப்பிவைத்தது.
நன்றி ரிலையன்ஸ்
அதன்படி, 30 டன் திரவ ஆக்சிஜனை சுமந்துகொண்டு டேங்கர் லாரி குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்குப் புறப்பட்டது. இது பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இச்செயலுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் துளசி ராம் சிலவட், "துயர காலத்தில் எங்களுக்கு திரவ ஆக்ஸிஜனை வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு