புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் முக்கியமானது மும்மொழி கொள்கை. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1986இன் கல்விக் கொள்கைக்கு மாற்றாக "புதிய கல்விக் கொள்கை 2020" அமல்படுத்தப்படுகிறது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவது குறித்து மறுஆய்வு செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அலுவலர்களுடன் நாளை(ஜனவரி-11) உயர் மட்டக் கூட்டத்தை நடத்துவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கல்வி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு நிலைமை சரியாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வது சரியான முடிவு" என்றார்.