டெல்லி: மாநிலங்களவையின் கடந்த ஏழு கூட்டத்தொடர்களில் நாள்தோறும் சராசரியாக 78 விழுக்காடு உறுப்பினர்கள் வருகைபுரிந்துள்ளதாக மாநிலங்களவைச் செயலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு கூட்டத்தொடரில் முழுவதுமாகக் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை 30 விழுக்காடாக இருந்தது. அதேபோல் மாநிலங்களவைக்கு வருகைதராத உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு மட்டுமே இருந்தது.
கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பங்கேற்பு நிலவரம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிய விழைந்தார். அதனடிப்படையில் நாடாளுமன்றச் செயலகம் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பங்கேற்பின் அளவு பற்றிய முதல் அளவீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவிட்-19 தொற்றின்போது எத்தனை பேர் பங்கேற்றனர்?
இந்த ஆய்வின்படி - அமைச்சர்கள், துணைத்தலைவர், அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடத் தேவையில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்) சட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 225 உறுப்பினர்கள் தங்கள் வருகையைக் குறித்தனர் என்பது தெரியவருகிறது.
254ஆவது கூட்டத்தொடரின்போது (கடந்த மழைக்காலக் கூட்டத்தொடர்) நாள்தோறும் வருகை அதிகபட்சமாக 82.57 விழுக்காடு பதிவாகியுள்ளது, முந்தைய ஒரு கூட்டத்தொடரில் நாள்தோறும் வருகைப்பதிவு குறைந்தபட்சமாக 72.88 விழுக்காடு பதிவாகியுள்ளதை இந்த ஆய்வு காட்டுகிறது.
இந்தக் காலகட்டத்தில், 29.14 விழுக்காட்டினர் முழு வருகையைப் பதிவுசெய்தனர். 1.90 விழுக்காட்டினர் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக வரவில்லை என்றும், அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத் தவறினால்...
கோவிட்-19 தொற்றுநோய் கடந்த மூன்று கூட்டத்தொடர்களில் வருகையைப் பாதிக்கவில்லை என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. 252ஆவது கூட்டத்தொடரின்போது, முதன்முதலாக கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்றி, 99 உறுப்பினர்கள், மொத்தத்தில் 44.19 விழுக்காட்டினர் 10 அமர்வுகளிலும் பங்கேற்றுள்ளனர்.
254ஆவது கூட்டத்தொடரின்போது 17 அமர்வுகளில் 98 உறுப்பினர்கள் அதாவது 46 விழுக்காட்டினர் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தொடர் வாரியாக, 251ஆவது தொடரின்போது முழு வருகைக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 (15.27 விழுக்காடு) முதல், 254ஆவது தொடரின்போது 98 (46 விழுக்காடு) வரை இருந்தது.
248ஆவது கூட்டத்தொடரின்போது, இரண்டு உறுப்பினர்கள் எந்த அமர்விலும் பங்கேற்கவில்லை. 252ஆவது தொடரின்போது 21 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை (கோவிட் விதிகளின்கீழ் நடைபெற்ற தொடர்கள்). சட்டவிதிகளின்கீழ், உறுப்பினர்கள் ஒவ்வொரு அமர்வின்போதும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும், தவறினால் அவர்களுக்கு நாள்தோறும் உதவித்தொகை ரூ.2,000 வழங்கப்படுவதில்லை.
முழுமையாகப் பங்கேற்றோர்
மாநிலங்களவை நடவடிக்கைகளில் தனிப்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்பில், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் (75) இந்த ஏழு கூட்டத்தொடர்களில் 138 அமர்வுகளிலும் கலந்துகொண்டார்.
அசோக் பாஜ்பாய், டிபி வாட்ஸ், நீரஜ் சேகர், விகாஸ் மகாத்மே, ராம்குமார் வர்மா உள்ளிட்ட ஐந்து பேர் ஆறு தொடர்களில் முழுமையாகக் கலந்துகொண்டனர். ராகேஷ் சின்ஹா, சுதன்ஷு திரிவேதி, கைலாஷ் சோனி, நரேஷ் குஜ்ரால், விசம்பர் பிரசாத் நிஷாத், குமார் கேட்கர், அமீ யாக்னிக் ஆகிய ஏழு உறுப்பினர்கள் ஐந்து கூட்டத்தொடர்கள் முழுவதும் வருகைபுரிந்தனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச வன்முறை: 18 பேர் கைது