ராஜஸ்தான் (சித்தோர்கர்): ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில், பட்டியலின முதியவர் தலையில் காலணியை வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்தில் பட்டியலின முதியவர் ஒருவர் தலையில் காலணிகளை வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இச்சம்பவம், குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, உள்ளூர் பட்டியலின அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம், செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட முதியவர் தால்சந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மாலை கிராம பஞ்சாயத்துக்கு பட்டியலின முதியவர் தால்சந்த் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதன் பேரில், கிராம பஞ்சாயத்துக்கு சென்ற போது அங்கு இருந்த மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக மிரட்டி தலையில் காலணிகளை வைத்து மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது! போலீசார் கொடுத்த தகவல் என்ன?
தற்போது, இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் பட்டியலின முதியவர் தலையில் காலணிகளை வைத்து கொண்டு குறிப்பிட்ட சமூக மக்களிடம் மன்னிப்பு கேட்பதை போன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது, பட்டியலின அமைப்புகள் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் மனு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர், தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிற்கும் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சிலை விற்பனை விவகாரத்தில் உச்ச நிதிமன்றம் அதிரடி.. தலைமை நீதிபதி கூறியது என்ன?