கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொச்சியில் உள்ள புனித தெரசா கல்லூரியில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பொருளாதாரச் சீர்கேட்டிற்கு அரசே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, மக்களின் பாக்கெட்டிலிருந்து மத்திய அரசு வலுக்கட்டாயமாகப் பணத்தை எடுப்பதாகவும் அதனை வைத்துக்கொண்டு அரசை நடத்துவதாகவும் விமர்சித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நுகர்வை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். மக்களிடம் நேரடியாகப் பணம் வழங்குவதன் மூலம் அவர்கள் பொருளை வாங்குவார்கள். நுகர்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றின் காரணமாக பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது; ஏற்கனவே, பலவீனம் அடைந்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, மொத்த பொருளாதாரமும் சரிவைச் சந்தித்துள்ளது" என்றார்.