டெல்லி: கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். ''நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?'' என ராகுல் காந்தி பேசினார்.
இதைக் கண்டித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது.
மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் உடனடியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சங்கலப சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் காந்தி நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் 144 தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் புது மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கூறும் வகையில் தன் ட்விட்டர் பயோவில் தகுதி நீக்கப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான ராகுல் காந்தி 239 ட்விட்டர் கணக்குகளை பின் தொடர்ந்து வருகிறார். மேலும், 2 கோடியே 30 லட்சம் பேர் அவரை பின் தொடருகின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "மன்னிப்பு கேட்க தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்றும் காந்தி" என்றும் கூறினார். இந்த கருத்துக்கும் ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் முயற்சி - காலிஸ்தான் அமைப்பினர் கிளர்ச்சி!