திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, வருகிற 12 மற்றும் 13 ஆகிய நாட்களில், தனது சொந்தத் தொகுதியான கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு வருகை தர உள்ளதாக கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் விடி சித்திக் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, கர்நாடகாவின் கோலாரில், ‘மோடி’ சமூகம் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசியதாக பாஜக பிரமுகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு, அரசு பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த சூரத் முதன்மை நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் ராகுலின் தண்டனையை உறுதி செய்தன. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதனால், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் விடி சித்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி ராகுல் காந்தி வயநாடு வர இருக்கிறார்.
நாங்கள் அவரை உற்சாகமாக வரவேற்பதற்காக தயார் நிலையில் இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். இதற்காக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நாளை (ஆகஸ்ட் 9) நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் ராகுல் காந்தி இங்கு இருப்பார். வயநாடு வரலாற்றில் ராகுல் காந்தியின் தற்போதைய வருகை முக்கியமான ஒன்றாக அமையப் போகிறது” என தெரிவித்தார்.
முன்னதாக, “இந்த நாடு முழுவதும் என்னுடைய வீடு” என ராகுல் காந்தி கூறி இருந்தார். மேலும், சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை அடுத்து ராகுல் காந்தி, சோனியா காந்தியின் 10 என்ற எண் கொண்ட ஜான்பத் சாலை இல்லத்தில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாள் விவாதம்.. மக்களவையில் ராகுல் காந்தி உரை!