தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேசிய தலைவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு படையெடுத்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அங்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரிக்கு வந்து பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை ஏற்று ராகுல்காந்தி நாளை (பிப்.17) 12 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி விமான நிலையம் வருகிறார் அங்கு அவருக்கு மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் அரசியல் கலப்பு அல்லாமல் மீனவ சமுதாய மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் ஏ.எப்.டி மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் புதுச்சேரி விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.