ஹைதராபாத்(தெலங்கானா): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் 'ஜோடா யாத்ரா' எனும் நடைப்பயணத்தின் ஒருபகுதியாகக் கர்நாடகாவிலிருந்து இன்று(அக்.23) தெலங்கானா மாநிலம் வந்தடைந்தார். அப்போது அவருக்குத் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் ஆகியோர் உட்பட அம்மாநில காங்கிரசார் வரவேற்பளித்தனர்.
மேலும், நடைப்பயணத்தை இன்று அக்.23 மதியம் முதல் வரும் அக்.26 வரை சில காரணங்களுக்காகத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்குப் பின் மீண்டும், வரும் அக்.27 ஆம் தேதி நடைப்பயணம் தொடங்க உள்ளதாகக் காங்கிரஸ் மேலிடம் அம்மாநில பிசிசியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, ராகுல்காந்தி தெலங்கானாவில், நாராயண்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடேபெல்லூரில் தங்கிப் பின், ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்குச் செல்வார் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அக்.27 ஆம் தேதியில் குறிப்பிடப்பட்ட படியே, 16 நாட்கள் 375 கி.மீ தூரத்திற்கு 19 சட்டப்பேரவை, 7 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தெலங்கானாவில் நடைப்பயணம் தொடரும். அதனைத் தொடர்ந்து, வரும் நவ.7 ஆம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நடைப்பயணமானது நுழையும்.
இவ்வாறு நாளொன்றுக்கு 20 முதல் 25 கிமீ வரையான நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கும் ராகுல்காந்தி, இடையிடையே அவர் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதோடு பல்வேறு பிரபலங்களைக் காண உள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கிய இந்த நடைப்பயணம், தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைக் கடந்து தெலங்கானாவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸில் யாரும் அரசியல் செய்ய முடியாது - மல்லிகார்ஜூன கார்கே