டெல்லி: அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது.
இந்த நிலையில் இன்று(பிப்.7) நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அதானி குழும விவகாரம் தொடர்பாகவும், பிரதமர் மோடி மற்றும் அதானி இடையிலான உறவு குறித்தும் பேசினார். அப்போது, இரண்டு புகைப்படங்களை ராகுல் காந்தி காண்பித்தார். ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி அதானியுடன் அமர்ந்திருப்பது போலவும், மற்றொன்று அதானியின் லோகோ கொண்ட விமானத்தில் மோடி ஏறுவது போலவும் இருந்தது. இதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, மோடி மற்றும் அதானி இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
விமானங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் என அரசின் பல்வேறு துறைகளில் இருந்தும் அதானி குழுமத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும்; அதானி குழுமத்தின் இந்த அதீத வளர்ச்சி எப்படி சாத்தியமானது? என்றும்; இத்தனை துறைகளில் அவரால் எப்படி நுழைய முடிந்தது? எனவும் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
அதேபோல், அதானிக்கும் மோடிக்கும் என்ன உறவு? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அதற்கு பதில் இந்த புகைப்படங்கள்தான் - இதுதான் அவர்களது உறவு என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அந்த புகைப்படங்களை பிற உறுப்பினர்களுக்கும் காண்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இதுபோன்ற போஸ்டர்களை அவையில் காண்பிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். அதற்கு, இவை போஸ்டர்கள் இல்லை, போட்டோக்கள் என்று பதிலளித்தார். ராகுல் காந்தியின் நடவடிக்கைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, முன்பு மோடி அதானியின் விமானத்தில் சென்றார், இப்போது அதானி மோடியின் விமானத்தில் செல்கிறார் என்று குறிப்பிட்டார். அதானியை மோடி அரசு வளர்த்துவிட்டதாக மறைமுகமாக அவ்வாறு குறிப்பிட்டார்.
அதானி விவகாரம் முதலில் குஜராத்தில் மட்டும் இருந்தது, பிறகு அது இந்திய அளவில் பூதாகரமானது, இப்போது சர்வதேச பிரச்னையாக மாறிவிட்டது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவுக்கு அதானி எவ்வளவு பணம் கொடுத்தார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 'அதானி' பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி