மேற்கு வங்கம்: பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் 36 நவீன ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஏறத்தாழ 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
முதற்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்த நிலையில், முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. தொடர்ந்து தொகுதிகளாக பிரான்ஸ் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை அனுப்பி வந்தது. .
35 ரஃபேல் போர் விமானங்கள் டெலிவிரி செய்யப்பட நிலையில், கடந்த 15ஆம் தேதி 36-வது மற்றும் கடைசி ரஃபேல் விமானமும் டெலிவிரி செய்யப்பட்டது.
பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தியா வந்ததை குறிப்பிடும் வகையில், இந்திய விமானப் படை ட்விட்டர் பக்கத்தில் "பேக் இஸ் கம்ப்ளீட்" என பதிவிடப்பட்டது.
வானில் இருந்தே இலக்கை குறித்து வைத்து தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்து அழித்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாகச் செய்யக் கூடியது ரஃபேல் விமானம். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹசிமரா விமானப் படை தளத்திற்கு ரஃபேல் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்த சீன ஊடுருவல்களை தடுக்கும் பணியில் ரஃபேல் விமானம் ஈடுபடுமென விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் ஹசிமராவில் உள்ள கிழக்கு ஏர் கமாண்ட் விமான படை தளத்திற்கு வந்த ரஃபேல் விமானத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓடுதளத்தின் இரு புறத்தில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடித்து ரஃபேல் போர் விமானத்தை வீரர்கள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த குடும்பம்... மருத்துவமனையில் பாசப் போராட்டம்...