புதுச்சேரி : கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனிடைய புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை அவரவர் பெற்றோர்களின் செல்போன்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (செப்.15) தேர்வுகள் தொடங்கும் என்றும், தேதி வாரியாக பாடங்களுக்கான தேர்வுகள் குறித்த விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.மேலும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகளை இம்மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை.
இதுதொடர்பாக, அரசு பள்ளி மாணவர்கள் கூறுகையில், தங்களுக்கு அதுபோன்ற அட்டவணை எதுவும் வரவில்லை என்று தெரிவித்தனர்.தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு அரசு பள்ளிகளில் வெளியிடப்படாதால் தனியார், அரசு பள்ளி மாணவர்கள்,பெற்றோர் இடையே குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.
இதையும் படிங்க : 1-8ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும்