சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் களம் கண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வரும் ஜனவரி 27ஆம் தேதி அமிர்தர்சரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார். அன்று, காங்கிரஸ் கட்சியின் 117 வேட்பாளர்களுடன் அமிர்தசர் பொற்கோயில், துர்கியானா மந்திர், பகவான் வால்மீகி மந்திர் ஆகிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிப்பாடு மேற்கொண்டு, ஜலந்தர் நகரத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிட்டுள்ளார்.
புதிய பஞ்சாப் யாருக்கு?
பின்னர், ஜலந்தரில் 'பஞ்சாப் ஃப்தேக்' (Punjab Fateh) என்ற தலைப்பில் காணொலி வாயிலாக பேரணி ஒன்றை நடந்த உள்ளார். அதன்பின்னர், டெல்லி திரும்பும் ராகுல் காந்தி, அங்கிருந்து கட்சி தலைவர்களிடமும், ஊடகங்களிடமும் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தேர்தல் முழக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'புதிய சிந்தனை புதிய பஞ்சாப்' என்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள முழக்கத்திற்கு பதிலடியாக, பஞ்சாப் மாநில பாஜக 'புதிய பஞ்சாப் பாஜகவின் பஞ்சாப்' என்ற முழகத்தை முன்வைத்துள்ளது.
ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எங்களின் தொலைநோக்குடைய தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 27ஆம் தேதி பஞ்சாப்பிற்கு வருகை தருகிறார்.
அவரை வரவேற்க பஞ்சாப்பின் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் எதிர்பார்த்துக் காத்திக்கொண்டிருக்கின்றனர் எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Union Budget 2022-2023: பிப்.1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்!