லூதியானா : பஞ்சாப்பில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டு 5 பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப், லூதியானா அடுத்த கியாஸ்புரா பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காலையில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் மயங்கி விழுந்து உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
எரிவாயு கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பெண்கள். 2 குழந்தைகள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 11 பேர் சுய நினைவு இழந்த நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சுயநினைவு இல்லாமல் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. எரிவாயு கசிவுக்கான காரணம் என்ன என்பது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். எரிவாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
கசிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயு கசிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் மருத்துவர்கள், களத்தில் இருந்து துரித சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எரிவாயு கசிவு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டு வருவதாகவும் கூறினர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பக்வத் மான் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : Mann Ki Baat : "மன் கி பாத்" - 100-வது எபிசோடில் உரையாற்றும் பிரதமர் மோடி!