சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய 40 வயதான பஞ்சாப் விவசாயி அமரீந்தர் சிங் சனிக்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் பதேகார்க் சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அமரீந்தர் சிங். இவர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி- சிங்கு எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை (ஜன.9) விஷமருந்தி மயங்கிய நிலையில் காணப்பட்ட இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோனிபட்டில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
இது குறித்து குண்லி காவல்நிலைய ஆய்வாளர் ரவி குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் நாடு முழுக்க போராடிவருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி, உள்ளூர் சந்தைகள் ஒழிக்கப்படாது என்று திரும்ப திரும்ப கூறிவருகிறது.
இதையும் படிங்க: மண்டல வருவாய் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட பெண் விவசாயி