சண்டிகர்: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் விமர்சனத்தால், அவமானப்படுத்தப்பட்ட பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
"சனிக்கிழமை காலை சோனியா காந்தியை தொடர்புகொண்டு எனது அதிருப்தியை தெரிவித்தேன், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என அவரிடம் தெரிவித்தேன்" என ராஜினாமா செய்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலை தீர்த்து வைப்பதற்காக டெல்லிக்கு இரண்டு முறை அமரிந்தர் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் போது நடத்தப்பட்ட விதம் அவமானப்படுத்துவது போல் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த கேள்விக்கு, கட்சி நம்பும் ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமரவைக்கட்டும் எனவும், நான் காங்கிரஸ் கட்சியில்தான் இப்போதும் இருக்கிறேன் எனவும் பதிலளித்துள்ளார்.
மேலும், தனது ஆதரவாளர்களுடன் பேசிவிட்டு அடுத்தகட்ட செயல்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரதமர் மோடியுடன் நல்லுறவைக் கொண்டிருக்கும் அமரிந்தர் சிங், இன்று ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கு மத்தியில், அவர் பாஜகவில் இணையவேண்டும் என பாஜகவினர் சிலரும் அழைப்புவிடுத்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுமாறு நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் 2022; ஷிரோமணி அகாலிதளம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!