பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் தேர்தல் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசியதாவது, ”பஞ்சாப் வளர்ச்சி, வளம் பெறுவதற்கு 10 அம்ச 'பஞ்சாப் மாடல்' திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சி ஏற்படுத்துவதுடன் வேலை தேடி கனடாவிற்கு சென்றவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள்.
போதை கூட்டணியை உடைப்பதுடன், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். 15 ஆயிரம் மொகல்லா கிளினிக் அமைப்பதுடன் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம்.
வாரத்தின் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்குவோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : எல்லை பாதுகாப்பில் சமரசம் இல்லை - ராணுவ தளபதி நரவனே