மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் கோண்ட்வே துவாடே பகுதியில் சிறுமி ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சோனோகிராபி (Sonography) என்னும் ஒலி முறை மருத்துவத்தை மருத்துவர்கள் சிறுமிக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சிறுமியும் அவரது தாயாரும் இதனை மறுத்துள்ளனர். அடுத்த சில நாட்கள் கழித்து சிறுமி, யூடியூப் வீடியோக்களை பார்த்து தனது குழந்தையை தானே பெற்றெடுத்துள்ளார்.
அதேநேரம் பிறந்த குழந்தையை, தான் வசிக்கும் கட்டடத்தின் அருகே தூக்கி எறிந்துள்ளார். இவ்வாறு தூக்கி வீசப்பட்ட குழந்தையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அப்போது குழந்தை இருந்த சில மணி நேரங்களில் அருகில் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த காவல்துறையினர், சிறுமியிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில், தான் யூடியூப் பார்த்து குழந்தையை பெற்றெடுத்ததையும், பின்னர் குழந்தையை தூக்கி வீசியதையும் சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அறிந்த மகளிர் ஆணையம், சிறுமி மற்றும் அவரது தாயார் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டரை வயது குழந்தை வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு