புதுச்சேரி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக நேற்று (செப்.12) புதுச்சேரி வந்தடைந்தார். தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் ஏழு கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து இன்று (செப்.13) புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அரசு பொறியியல் கல்லூரி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகத்தை வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சரவணன் குமார், நமச்சிவாயம் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2.4 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். வெங்கையா நாயுடு தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (செப்.14) தனி விமானம் மூலம் சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொற்று சமயத்தில் சூரிய ஒளி முக்கியமானது - குடியரசு துணைத் தலைவர்