கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் ஒன்றாம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்காக ஒரு லட்சம் தடுப்பூசிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு லட்சம் தடுப்பூசிகள் புதுச்சேரியில் கையிருப்பு உள்ளன.
மேலும் 1000 ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக் குப்பிகள் வாங்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசி தேவைப்பட்டால் உடனடியாக வழங்கப்பட்டுவருகிறது.
ரெம்டெசிவிர் மருந்து மட்டும் உயிர்காக்கும் மருந்து அல்ல; அதனால் மருத்துவர்கள் இது குறித்து பரிந்துரைக்கும்போது, அதன் தேவைப்பட்டால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என ஒரு மருத்துவராக நான் சொல்கிறேன்" என்றார்.