வடதமிழ்நாடு அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்றிலிருந்து (நவம்பர் 7) மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜர் நகர், கடற்கரை சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் தகடிப்பட்டு, கன்னியகோயில், காலாபட்டு, திருக்கனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கி நிற்கின்றது.
குறிப்பாக தாழ்வான இடங்களான ரெயின்போ நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருக்கக் கூடிய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை நீரை அகற்றும் பணி
தேங்கி நிற்கும் மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 82.10 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்றும், நாளையும் (நவம்பர் 8,9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (நவம்பர் 8) தொடங்கவிருந்த 1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களே! உடனடியாக கரை திரும்புங்கள் - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்