புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது.
இந்த காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதன்படி காவலர் பணிகளுக்கு 390 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது. மீதம் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமை தாங்க சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவைச் சேர்ந்த நாஜிம், நாக. தியாகராஜன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ்குமார், சிவசங்கரன், இராமலிங்கம், அசோக் பாபு, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பாமல் உள்ளதால் பல கோப்புகள் தேக்கம் அடைந்து மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. அரசு வேலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 35 வயது என்பதை 40 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இளைஞர்கள் எதிர்கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு ஒன்றையும் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.