புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் உலக மருத்துவர் நாள் விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
பின் கரோனா பணியில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியருக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர், "மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரைப் பாதுகாப்பவர்கள்; அவர்களை அரசு பாதுகாக்கிறது.
கரோனா பணியின்போது ஆயிரத்து 500 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் மற்றவர்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதேசமயம் அவர்களும் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
வெண்ணிற ஆடை தேவதைகள்
வெள்ளுடை தேவதைகளாகச் செயல்பட்டுவரும் மருத்துவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நோயாளிகளைப் பார்த்துப் பேசுவது தற்போது குறைந்துவருகிறது. நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவாகப் பேச வேண்டும்.
தடுப்பூசி அவசியம்
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அரசு மருத்துவமனைகள்தான் சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்" என்றார்.