புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (மே 09) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வாலைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பின்னர், துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளார்களிடம் பேசுகையில், 'ஜிப்மரில் இந்தி ஆதிக்கம் என்பது ஒரு சுற்றறிக்கை தான். அதை தவறாகப் புரிந்துள்ளனர்; இங்கு மொழித்திணிப்பு இல்லை. நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மட்டுமே. முடிந்தவரை இந்தியைப் பயன்படுத்தலாம் என்றுதான் உள்ளது. இது நான்காவது சுற்றறிக்கை. முதல் சுற்றறிக்கையில் ஆங்கிலம், தமிழ் இருக்க வேண்டும் என உள்ளது.
அதே தேதியிட்ட சுற்றறிக்கையில், தமிழ் இருக்க வேண்டும் என உள்ளது. நோயாளிகள் பதிவு செய்வது, அவர்களைத் தொடர்புகொள்வது போன்றவற்றிற்கு தமிழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதால், அவர்களுக்காக தேவைப்பட்டால் இந்திப் பயன்படுத்தலாம் என்றுதான் உள்ளது.
தமிழ் பிரதானப்படுத்தப்படுகிறது; தமிழில் சேவை உள்ளது. இந்தி திணிப்பு இங்கு இல்லை. இதை அரசியல்படுத்த வேண்டாம். தமிழைப் பெருமைப்படுத்தும் மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக உள்ளேன். உள் சுற்றறிக்கையை வெளியில் கொண்டுவந்து அதை மிகைப்படுத்துவது தவறு. பல்வேறு கட்சியினர் நடத்தும் இந்த போராட்டம் தேவையற்றது. நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் சேவை செய்ய வழிவிடுங்கள். ஜிப்மரில் தமிழ் முதன்மைப்படுத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடிக் கைதான 4 திமுக எம்எல்ஏக்கள் விடுதலை