புதுச்சேரி : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர் நடவடிக்கை காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ‛ஆபரேஷன் கங்கா' என்னும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்டு வருகிறது.
இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (மார்ச்.6) செய்தியாளர்களிடம் பேசுகையில், உக்ரைனில் புதுசேரியை சேர்ந்த 27 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாகவும், அதில் 15 பேர் மத்திய அரசின் உதவியோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3 மாணவிகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எஞ்சிய மாணவர்களைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அந்நாட்டில் இருந்து புதுச்சேரி திரும்பும் மாணவர்களின் அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட அரிசி மற்றும் பண்டிகை பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போரை நிறுத்துங்கள்: மணக்கோலத்தில் வலியுறுத்திய மணமக்கள்