புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதற்கிடையில், வேறு கட்சியிலிருந்து பிரிந்து என்.ஆர் காங்கிரஸிற்கு வந்தவர்களுக்கும், தொடக்க காலத்திலிருந்து கட்சியில் உள்ள விசுவாசிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அவர்களை தேர்தலில் களமிறக்க வேண்டும் என எண்ணிய என்.ஆர் காங்கிரஸின் தலைவர் ரங்கசாமி அவர்களுக்கான தொகுதிகளை தேர்வு செய்வதில் திணறி வருகிறார்.
இதுஒருபுறமிருக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மல்லாடி கிருஷ்ணராவ், முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமியை ஏனாம் தொகுதியில் போட்டியிட அழைத்தது மட்டுமின்றி, ரங்கசாமியின் உருவப்படத்தை தனது வாகனத்தில் ஒட்டிக்கொண்டு வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் ஏனாம் தொகுதியில் போட்டியிட அதிகளவு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டமின்றி, ரங்கசாமி மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது குறித்து ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
இதனிடையே அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறுகையில், “ரங்கசாமி மனுத்தாக்கல் செய்வதற்காக நாளை (மார்ச்14) ஏனாம் புறப்பட்டு செல்கிறார். அதற்கு மறுநாள் மனுத்தாக்கல் செய்துவிட்டுநாள் முழுக்க பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கிறார். பின்னர் புதுச்சேரி திரும்பும் அவர் மாநிலம் முழுவதும் சூறாவளி பரப்புரை மேற்கொள்வார்” என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறினார்.