புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கரோனா பரவினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். 14 லட்சம் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடவேண்டும்.
இரண்டு தடுப்பூசி போட்டால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். கரோனா எதிர்ப்பு சக்தியை பெற முடியும். தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்தவேண்டும்” என்று கேட்டு கொண்டுள்ளார்.
புதுச்சேரி வஞ்சிக்கப்படுகிறது
தொடர்ந்து “அரசு பள்ளிகளில் படித்தோருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க அமைச்சரவையில் முடிவெடுத்து, அரசு ஆணையாக வெளியிட்டோம். அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தினார்.
மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் தரவில்லை. பிறகு நீதிமன்றம் சென்றோம். அதை பரிசீலனை செய்யவில்லை. தமிழ்நாட்டில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசானது, பத்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் கொண்டு சென்று பெற முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.
புறக்கணிப்பு
மேலும், “கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாதம் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அதே நிலை முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியை மத்திய பாஜக அரசு புறக்கணித்தது போலவே, தற்போதைய ஆட்சியையும் புறக்கணிக்கிறது.
மாநில அரசு அதிகாரத்தை பறிக்கிறது. புதுச்சேரியை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பெண்கள் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்