புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜமௌரியா. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த 25ஆம் தேதி திருச்சி கிழக்கு தெருவைச் சேர்ந்த சதிஷ்குமார் என்ற இளைஞர் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார்.
இரவு படுப்பதற்கு பெட்ரோல் பங்க் அருகே சதிஷ் சென்றபோது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவரை திருடன் என நினைத்து அழைத்துள்ளனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, ஊழியர்கள் பங்க் உரிமையாளர் ராஜமௌரியா, அவரது தம்பி ராஜவரதன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இரவு உறங்க இடம் தேடி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதை நம்பாமல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சதிஷ்குமார் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தினர். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் ராஜமௌரியா, ராஜவரதன், ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகியோரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இன்று (ஜூலை. 30) பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல்படியும், மாநிலத் தலைவர் சாமிநாதன், ஆலோசனைப்படியும் ராஜமௌரியா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.