டெல்லி: பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, கடந்த மே மாதம் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஏராளமான இஸ்லாமிய நாடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நூபுர் சர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அதேநேரம் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நூபுர் சர்மா மீது கொல்கத்தா, டெல்லி உள்ளிட்டப் பகுதிகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில், தொலைக்காட்சி நெறியாளர் நவிகா குமாரின் பெயரும் சேர்க்கப்பட்டது. இதையடுத்து தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி நவிகா குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நவிகா குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசு மற்றும் மேற்குவங்க அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஏற்கெனவே இந்த வழக்குகளில் நூபுர் சர்மாவை, ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நுபுர் சர்மாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்!