உத்தரப் பிரதேசம்: ஆக்ராவில் உள்ள பராஸ் மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் அரிஞ்சய் ஜெயின், நோயாளிகளுக்குச் செலுத்தப்பட்ட ஆக்சிஜன் இணைப்ப துண்டித்தது குறித்துப் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆக்சிஜன் துண்டிப்பால், அந்நாளில் 22 நோயாளிகள் ஆபத்தான கட்டத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில், அந்த மருத்துவமனையில் 96 கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்
அந்த வைரல் வீடியோவில் அவர் பேசியதாவது, " மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வெளியேறக் கேட்டுக்கொண்டோம். ஆனால், யாரும் செல்ல முன்வரவில்லை. எனவே, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை நடத்திக் காட்ட முடிவு செய்தேன். ஏப்ரல் 26 அன்று 7 மணியளவில் ஆக்சிஜன் சப்ளை ஐந்து நிமிடம் நிறுத்தப்பட்டது. 22 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலரின் உடல் நீல நிறத்திற்கு மாறியது.
ஆக்சிஜன் இருந்தால் தான் உயிர் பிழைப்பார்கள் என்ற நிலைமை அவர்களுக்குப் புரிந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 74 நோயாளிகளிடம் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்ட வர அறிவுறுத்தினோம்" என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவரிடம் கேட்டபோது, வீடியோ தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆக்ரா மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், அந்நாளில் மருத்துவமனையில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த மருத்துவமனையில் 45 கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது ஆனால், அதை மீறி 96 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கி வந்துள்ளனர். எனவே, கரோனா தொற்று பரவும் இடமாக மருத்துவமனை இருந்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தை மிரட்டிய மின்னல்... ஒரே நாளில் 27 பேர் பலி!