டெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை நடக்க இருக்கிறது. இன்னும் சில மாதங்களே இருப்பதால், பல்வேறு கட்சியினர் தங்களின் பரப்புரைகளை தொடங்கிவிட்டனர். இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச அரசை கண்டித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில்," ஊரடங்கின்போது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வெறுங்காலுடன் நடைபயணம் சென்றபோது இந்த அரசு அவர்களின் துயர் போக்க பணத்தை செலவழிக்கவில்லை.
காங்கிரஸின் முகம்
ஆனால், தற்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பேரணிகளுக்கு கோடி கோடியாய் பணத்தை வாரிவழங்குகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் உடன் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் புகைப்படத்தையும் சேர்ந்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் 400 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். லக்கிம்பூர் கெரி விவகாரம் முதற்கொண்டு, உத்தரப்பிரதேசத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் பிரியங்கா காந்தி, அங்கு காங்கிரஸின் முகமாக திகழ்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.