டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று(மார்ச்.26) நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் சத்தியாகிரகப் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பிரதமரின் மகன் ராகுல் காந்தி. நாட்டின் ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைபயணம் செய்த அவரால் ஒருபோதும் நாட்டை அவமதிக்க முடியாது. சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க நேரம் வந்துவிட்டது. ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பது நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல.
அதானி மோசடி குறித்து கேள்வி எழுப்பியதற்காகவே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சதிக்குப் பின்னால் உள்ளவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்தான். எனது குடும்பம் நாட்டுக்காக ரத்தம் சிந்தியது. நாட்டின் ஜனநாயகத்திற்காக எதையும் செய்ய, நாங்கள் தயாராக இருக்கிறோம். நேரம் வந்துவிட்டது, நாங்கள் இனி அமைதியாக இருக்கமாட்டோம்" என்று கூறினார்.
மேலும், ''தியாகியான ஒரு பிரதமரின் மகனால் நாட்டை அவமதிக்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பிய அவர், ''இந்த நடவடிக்கை நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அந்த பிரதமருக்கு இழைக்கப்பட்ட அவமானம்'' என்றும் குறிப்பிட்டார். ''தியாகியின் மகனான ராகுல் காந்தியை துரோகி என்று கூறிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?'' என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர், இது தொடர்பாக சூரத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரது வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டம் - டெல்லியில் தடையை மீறி போராட்டம்!