கலபுர்கி (கர்நாடகா): ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
அதன்நீட்சியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) போராட்டம் நடத்தினார்கள். அப்போது துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்பவர் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமுற்ற விவசாயிகள் இரண்டு சொகுசு கார்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலளார் பிரியங்கா காந்தி சீதாப்பூரில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டார்.
இதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரியங்கா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை, கைது வாரண்ட் உள்ளிட்ட எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனினும் அவர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் சட்ட விரோத காவலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மரணத்துக்கு உத்தரப் பிரதேச அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : 'விவசாயிகள் மரணம், பிரதமர் மௌனம்'- சிவசேனா!