நாடு முழுவதும் இன்று (நவ- 14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் லாங்கேவாலாவில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், "ராணுவ வீரர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அன்பையும், வாழ்த்துகளையும் உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பனிமலையோ பாலைவனமோ எங்கு ராணுவ வீரர்கள் இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி. உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இரு மடங்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, பாலைவனமாக இருந்தாலும் சரி அனைத்து சவால்களிலும் உங்களின் வீரம் தான் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை நினைவுகூரும் போதெல்லாம் அதில் லோங்கேவாலா போர் நினைவில் இருக்கும். ஏனெனில் உலக வரலாறை எடுத்துக்கொண்டால் எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட வீரர்களைக் கொண்ட நாடுகளே முன்னேறியுள்ளன.
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் தங்களின் எல்லைகளை விரிவுபடுத்த நினைப்பது மோசமான போக்கு. அதனை எதிர்த்து இந்தியா குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பு எவ்வளவு மேம்பட்டாலும் நாம் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். 100க்கும் மேற்பட்ட ஆய்தங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக் கூடாது என இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜெய்சால்மரிலுள்ள லோங்கேவாலா பகுதியைத் தேர்ந்தெடுத்தார். இப்பகுதி 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் நினைவுச்சின்னமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், 2018ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டிலும், 2017ஆம் ஆண்டு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். 2016ஆம் ஆண்டில் ஹிமாச்சல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையிலும், 2015ஆம் ஆண்டு பஞ்சாபிலும், 2014ஆம் சியாச்சினிலும் எல்லையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.