டெல்லி : நாடாளுமன்றத்திற்கு வரும் போது சரி குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கொள்ளும் போது சரி எதிர்க்கட்சிகள் ஒருபோதும் தயாராக வருவதில்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் சரிவர தயாராகவில்லை என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்ததாகவும், ஆனால் 2023ஆம் ஆண்டிலும் அவர்கள் தயாராகவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவர்களுக்கு 5 ஆண்டுகள் வழங்கப்பட்ட போதும் அவர்களால் தயாராக முடியவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை கிடையாது என்றும் அவர்களுக்கு சொந்த கட்சியின் வளர்ச்சி மீதே விருப்பம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகள் யாருக்கு சாபம் விடுத்தாலும் அவர்கள் நல்ல வளமுடன் இருப்பார்கள் என்றார். எதிர்க்கட்சிகளிடம் ரகசிய சக்தி உள்ளதாகவும் அவர்கள் யார் மோசமடைய வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் நல்ல ஆசிர்வாதத்துடன் இருப்பார்கள் என்றும் அதற்கு வாழும் உதாரணம் நான் தான் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 20 வருடங்களாக எதிர்க்கட்சிகள் தன்னை திட்டுகிறார்கள் ஆனால் நான் முன்னேறி வருகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்துஸ்தான் பொது விமான நிறுவனத்தை தொடங்கிய போது அது பற்றி எதிர்க்கட்சிகள் மோசமாகப் பேசியதாகவும் ஆனால் தற்போது அது வெற்றியின் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் எல்.ஐ.சி. மீதும் எதிர்கட்சிகள் அவநம்பிக்கையை பரப்பியதாகவும், ஆனால் காப்பீட்டு நிறுவனமும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றினால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கூறியதாகவும், ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி எங்களிடம் அதற்கான திட்டத்தைக் கேட்டிருக்கும் அல்லது சில ஆலோசனைகளை வழங்கி இருக்கும் ஆனால் எந்த முயற்சியும் இல்லாமல் இது இறுதியில் நடக்கும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க : "நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜகவுக்கு வரப்பிரசாதம்..." - பிரதமர் மோடி!