புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ஆம் தேதி நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு பயணம் மேற்கொள்கிறார். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி செல்கிறார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி 5ஆவது முறையாக நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு லும்பினியில் உள்ள புகழ்பெற்ற மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார்.
லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெறவிருக்கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதேபோல், சர்வதேச பெளத்த மத கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில் அமையவிருக்கும் புத்த கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் நேபாள பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலர் வினய் மோகன் குவாத்ராவிடம், பிரதமரின் இந்த பயணத்தின்போது இந்திய-நேபாள எல்லைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்து பேசிய குவாத்ரா, "லும்பினியில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். நீர்மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையாக இது இருக்கும். இந்த பேச்சுவார்த்தையால் இருநாட்டின் உறவுகள் மேம்படும். எல்லைப் பிரச்சினைகள் அரசியல் மயமாக்கப்படாமல் பொறுப்புடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ., பயங்கரவாத அமைப்புகள்- கேரள உயர் நீதிமன்றம்