டெல்லி : நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (செப். 18) தொடங்கியது. 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து தமிழக எம்.பி. டி.ஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். இந்நிலையில், நேற்று (செப். 18) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் மோடி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களைவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால் மக்களவையில் மட்டும் ஒப்புதல் பெற்றால் போது எனக் கருதப்படுகிறது.
அதேநேரம், மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மட்டும் மீண்டும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சீனாவால் தமிழகத்திற்கு வரும் சிக்கல்.. இலங்கை உதவுகிறதா? - ராமதாஸ் கண்டனம்!