டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார்.
இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பாகும். நாட்டின் துடிப்பான ஜனநாயகத்திற்கு தலை வணங்குகிறேன்.
அரசுத் துறையின் பணிபுரிந்த அனைவரும் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர். அடுத்த மாதம் 75வது சுதந்திரதினத்தை கொண்டாட இருக்கிறோம். நாடு முழுவதும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் சுதந்திரம் பெற்றுத்தந்தை தியாகிகளை நினைத்துப் பார்க்கிறோம்.
21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற பாடுபட்டு வருகிறோம். நமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, நீர், நிலம், காற்று மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். எனது ஐந்தாண்டு கால பணியை சிறப்பாக ஆற்றியுள்ளேன். எனது பதவிக்காலத்தை முடிக்கும் இந்த தருணத்தில் நாட்டுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க:தாராவி கபடி வீரர் விமல்ராஜ் கொலை வழக்கு - 3 பேர் கைது!