உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டே, வரும் ஏப்ரல் 23ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பாப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தனக்கு அடுத்து மூத்த நீதிபதியாகவுள்ள என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு எஸ்.ஏ.பாப்டே பரிந்துரைத்தார்.
விதிகளின்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். இந்நிலையில், அவரது பரிந்துரை ஏற்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இவர், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, இவர் தலைமை நீதிபதி பதவியில் தொடர்வார். ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது, இது இரண்டாவது முறை. முன்னதாக, 1966 முதல் 1967 வரை, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்பா ராவ் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, கடந்த 2000ஆம் ஆண்டில் ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பின்னர், 2013இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டிலே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
இதையும் படிங்க: உச்சத்தில் கரோனா: ஒரேநாளில் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!