டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 26), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயப் பிரச்சினை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.
பின்னர், குடியரசுத் தலைவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்தது. அதன்படி அவரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.
அங்கு, அவருக்கு இதயம் தொடர்பான கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்திட முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 30) மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து அவரது ட்வீட்டில், "அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுகள். அவரது உடல்நலம் குறித்து எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசினேன். அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!