டெல்லி: 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திரைக் கலைஞர்களுக்குத் தேசிய விருதுகளை வழங்கினார்.
2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாகக் கடைசி விவசாயி தேர்வு செய்யப்பட்டது. மேலும் அந்த படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்திற்காக நடிகர் மாதவன், கருவறை என்ற ஆவணப் படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா, இரவின் நிழல் படத்தின் பாடலுக்காகச் சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும் அறிவிக்கப்பட்டது.
தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுன், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி, சிறந்த திரைப்படத்திற்கான விருது ஆர்ஆர்ஆர் (RRR) படத்திற்கு வழங்கப்பட்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன், நடிகர்கள் மாதவன், அல்லு அர்ஜூன், அலியா பட், இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹிதா ரஹ்மானுக்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றைய நிகழ்ச்சியில் அவருக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “சிவகார்த்திகேயன் சொல்ல முடியாத அளவிற்கு துரோகம் செய்துள்ளார்" - இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு பேட்டி!