மகாராஷ்டிரா: துலே மாவட்டத்தின் ஷிர்பூர் தாலுகாவில் துவன்பானி கிராமத்தைச் சேர்ந்தவர், லால்பாய் மோதிரம் பவரா என்ற பழங்குடிப் பெண். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர், உடனடியாக உறவினர்கள் போர்வையைக் கொண்டு, டோலி ஒன்று தயாரித்து கர்ப்பிணியை அதில் வைத்து 6 கி.மீ., தூரம் பாதயாத்திரையாகக் கொண்டு சென்றனர். அந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணியை டோலி கட்டிக் கொண்டு சென்றனர்.
பின்னர், குர்ஹல்பானியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண் வக்வாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பத்திரமாக பிரசவம் நடந்தது. நல்ல முறையில் குழந்தை பிறந்தது. கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் கர்ப்பிணியை ஊர் மக்கள் ஒன்று கூடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு மே 14ஆம் தேதியன்று, துவன்பானி கிராமத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தொடர்ந்து 2020 மே 15ஆம் தேதியன்று, இந்த சம்பவம் பல செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. அப்போது இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் காஷிராம் பவரா, குர்ஹல்பானிக்கு வந்து ஒரு நாளுக்குள் மருத்துவர் மற்றும் செவிலியரை நியமித்து பிரச்னையை தீர்த்துவைத்தார். ஆனால், அந்தச் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளாகிறது.
ஆனால், இன்றும் அந்த கிராமங்களில் சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இன்று மீண்டும் மூங்கில் பையில் ஒரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுமார் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பு துலே மாவட்டத்திற்குச் சென்ற தலைமை செயல் அதிகாரி புவனேஷ்வரி, துவன்பானி கிராமத்திற்குச் சென்றிருந்தார். அவரும், அவருடன் சென்ற அதிகாரிகளும் நடந்தே அந்த கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது கிராம மக்கள் சாலை அமைத்துத்தர கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது வரை சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் பவரா கூறுகையில், “குர்ஹல்பானி கிராம பஞ்சாயத்தின் கீழ் பத்து முதல் பன்னிரெண்டு கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பெண் உடலை டோலியில் சுமந்து சென்ற அவலம்! நடவடிக்கை எடுக்குமா அரசு?