ஹைதராபாத்: புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்தியர்களின் விருப்ப உணவில் கடந்த பல ஆண்டுகளாக பிரியாணி முதலிடம் பிடித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப பிரியாணியின் வகையும், சுவையும் மாறினாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான விருப்ப உணவில் பிரியாணிக்கு முதலிடம் தான்.
அந்த வகையில் ஹைதராபாத் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. புத்தாண்டு அன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல உணவகத்தில், ஏறத்தாழ 15ஆயிரம் கிலோ ஹைதராபாத் பிரியாணி தயார் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 2 பிரியாணி விற்பனை என புத்தாண்டு வியாபாரம் களைகட்டியதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மட்டும் ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் பிரியாணிகளை டெலிவரி செய்ததாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ட்விட்டரில் நடத்தப்பட்ட பொது கருத்துக் கணிப்பில் 75. 4 விழுக்காடு மக்கள் ஹைதராபாத் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி, 61,000 பீட்சா டெலிவரி